Monday, January 1, 2024

24 நவம்பர் 1973 செய்தி நாளிதழ் மதுரை வெளியீட்டு விழாவிற்கு அய்யா பழ நெடுமாறன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜரை அழைத்து இருந்தார். செய்தியின் ஆசிரியர் திருவாருர் எம்.ஜெயபால் அண்ணன் அவர்கள் என்னை தமுக்கம் மைதானம் தல்லாகுளம் சென்று பெருந்தலைவர் பேச்சினை ஒலிப்பதிவு செய்து கொண்டு வரும்படி கூறினார்கள்.கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் பேரன் இராஜாசண்முகம் மீனாட்சி ஆச்சியிடம் நேஷனல் பானோஸோனிக் டேப் ரெக்கார்டர் வாங்கிக்கொண்டு மைக்செட் காரரிடம் அனுமதி வாங்கி ஒரு சடம்பு கொண்டு கட்டி பதிவு செய்தேன். ' மாவீரன் நெடுமாறன் அஞ்சா நெஞ்சன் எனப்புகழுரை நிகழ்த்தினார்.தினமணி கோயங்கா அவர்கள் முனிச்சாலையில் அச்சாகி வெளிவந்த நாளிதழில் யுனிக் இபுராஹிம் வள்ளியப்பா செட்டியாரின் பேட்டி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா வெளிவந்தது. இறுதியில் நடிகர் திலகம் சிம்மக் குரலோன் செவாலியர் சிவாஜி கணேசன் பேசினார்கள்.அப்போது தொண்டர் ஒருவர் மேடையிலேறி ஒரு துண்டுச் சீட்டினைக்கொடுத்தார்.கலைஞர் அரசு துக்ளக் இதழைப் பறிமுதல் செய்து விட்டது என ஆவேசமாகக் கத்திக்கொண்டே மேடையில் இருந்து ஓடி விட்டார். கூட்டம் கலைந்து மக்கள் சிதறி ஓடினார்கள்.நானும் செய்வதறியாது திகைத்து நின்றேன். ஒருவாறு தெளிந்து டேப்ரிக்கார்டருன் நடந்தே மேலமாசிவீதி வந்து அண்ணன் ஜெயபால் அவர்களிடம் டேப்ரிக்கார்டரைப் போட்டுக் காட்டினேன். மறுநாள் செய்தி வெளிவந்தது.

No comments:

Post a Comment